Thursday, September 11, 2014

வாழ்க்கை ஒரு வட்டம்...

 சம்பவம் ஒன்று:

 ஆறு மாதங்களுக்கு முன்பு, வைரமுத்து சொன்னதைப்போல வயிற்றிற்கும் தொண்டைக்கும் நடுவில் உருவமில்லாதொரு உருண்டை உருளுவது போல் இருந்தது. மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வதற்காக சென்றேன், என் கெட்ட நேரம் அவர் அப்பொழுதுதான் என்டோஸ்கோபி சாதனத்தை தன் மருத்துவமனைக்காக வாங்கியிருப்பார் போல ஏதாவது ஆடு சிக்குமா என தேடிக்கொண்டிருந்தார் நான் மாட்டிக்கொண்டேன். ஒரு என்டோஸ்கோபி பண்ணிரலாம் என என்னை இழுத்து சென்றார், war of the worlds திரைப்படத்தில் வருவதுபோல தலையில் ஒற்றை கண் கொண்ட (கேமராவாம்)  நீளமான ஒரு கேபிளை என் தொண்டை வழியே வயற்றிர்க்குள் செலுத்தி எதையோ ரொம்ப நேரம் தேடிக்கொண்டிருந்தார், பின் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

ஒன்றுமில்லை அசிடிட்டி பிரச்சனை தான், உடல் எடையை குறையுங்கள், உணவில் ஆயில் சேர்த்துக்கொள்வதை தவிருங்கள், கொஞ்சம் உயரமான தலையணை வைத்து தூங்குங்கள் அதோடு கொஞ்சம் மருந்துகளும் தருகிறேன் சாப்பிடுங்கள் சரி ஆகிவிடும் என்றார். நானும் அவர் சொன்னபடியே எல்லாம் செய்தேன், இரண்டு மாதத்தில் சரியாகிவிட்டது.

சம்பவம் இரண்டு:

ஒரு மாதத்திற்கு முன்பு கழுத்தில் இருந்து தோள்பட்டை வரை கடுமையான வலி, தாங்கமுடியாமல் திரும்பவும் அதே மருத்துவரிடம் சென்றேன், என்னமோ  தெரியல என்னை பார்த்தால் மட்டும் அவருக்கு பலி ஆடு போலவே தெரியும் போல, எல்லாரும் ரத்தத்தில் சர்க்கரை இருக்கா, கொழுப்பு இருக்கா என்று பரிசோதனை செய்தால் என்னை மட்டும் கால்சியம் இருக்கா, விட்டமின் இருக்கா என சோதனை செய்து வரச்சொன்னார், சொல்லும்போதே கொஞ்சம் காஸ்ட்லி டெஸ்ட் சார் இருந்தாலும் எடுத்துகிட்டு வந்திருங்க என்றார் அதிலும் குறிப்பாக இந்த லேபுக்கு தான் செல்ல வேண்டும் என்றார். இவர் லேப்காரனிடம் வாங்கிய கடனெல்லாம் நாம கட்டவேண்டியிருக்கிறது என நொந்து கொண்டே அந்த லேபிற்கு சென்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து லேப் ரிசல்ட் வந்தவுடன் அவரை பார்க்க ரிசல்ட்டுடன் சென்றேன், எதுவும் சொல்லாமல் ரிசல்ட்ல் ஆங்காங்கே வட்டமிட்டு கொண்டே வந்தார், வட்டமிட்ட இடங்களை காட்டி என்னிடம் பேச ஆரம்பித்தார், சார் உங்களுக்கு விட்டமின் D கம்மியா இருக்கு அதனால கால்சியம் உடம்புல ஒட்டல எலும்பெல்லாம் பலவீனமா இருக்கு என்றார். என்ன சார் பண்ணலாம் என்றேன் நான்.

கொஞ்சம் உடல் எடையை அதிகப்படுத்துங்கள், உணவில் ஆயில் சேர்த்துக்கொள்ளுங்கள், அப்புறம் கழுத்து வலி வராமல் இருக்க சின்ன தலையணையாய் வைத்து தூங்குங்கள் என்றார்.

எனக்கு என்னமோ இளைய தளபதி டாக்டர் கோட் அணிந்து கொண்டு, "வாழ்க்க ஒரு வட்டம்டா இங்க ஒல்லியா இருக்கறவன் குண்டாகனும், குண்டா இருக்கிறவன் ஒல்லியாகனும்" என பஞ்ச் டயலாக் பேசுவது போலவே இருந்தது.

இப்பதான் தெரிந்தது இளைய தளபதிக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்று...

Friday, August 8, 2014

நூலகம்

 எனக்கு ஐந்து வயதிருக்கும் அப்பா என்னை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு அழைத்து சென்றார். தலையை சுற்றி காதை தொட சொன்னார்கள், தொட்டேன் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள் அவ்வளவுதான் என் பள்ளி சேர்க்கைக்கான நேர்முக தேர்வு, ஆனால் இன்று தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் சேர்த்து நேர்முக தேர்வு வைக்கிறார்கள். பள்ளி கட்டணம் மலை போல் உயர்ந்து விட்டது, சில புகழ் பெற்ற பள்ளிகளில் குழந்தை பிறந்தவுடனே விண்ணப்பம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அப்பள்ளியில் இடம் கிடக்கும். மேலோட்டமாக பார்த்தால் கல்வி வியாபாரமாகி விட்டதாகத்தான் தோணும், ஆனால் இன்னும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் காதை தொட சொல்லித்தான் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருந்ததும் தனியார் பள்ளிகளுக்கு இத்தனை மவுசு எப்படி வந்தது?  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் சரியாக பயிற்றுவிப்பதில்லை, போதுமான வசதிகள் இல்லை என ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், உண்மையான காரணம் இன்று மக்களிடையே இருக்கும் போட்டிதான் (competition) காரணம். இருபது வருடங்களுக்கு முன்னால் படிப்பு அறிவு உடையவர்களின் விகிதாச்சாரம் நாற்பது சதவீதமாக இருந்தது இன்று கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதத்தை தொட்டு விட்டது, நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பது முதல், வேலை, திருமணம் என அனைத்திலுமே போட்டி அதிகமாகி விட்டது. இந்த போட்டிகளில் ஓட தனியார் பள்ளிகள்தான் நம் குழந்தைகளை சிறந்த முறையில் தயார் செய்கின்றன.

பள்ளிகளும் தங்கள் கடமையை செம்மையாக செய்வதாக எண்ணிக்கொண்டு குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் ஒரு மனித எந்திரமாக மாற்றிவிடுகின்றன. பணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்பு நாளிதழ்களை புரட்டிப்பாருங்கள் புரியும். ஒவ்வொரு பள்ளியும் நாங்கள் தான் சிறந்த பள்ளி என்று மார்தட்டிக்கொண்டு விளம்பரம் செய்திருப்பார்கள். நூறு சதவீதம் தேர்ச்சி, 200 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேல், 100 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் என திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரம் செய்திருப்பார்கள்.

இந்த பள்ளிகள் உண்மையிலேயே அப்படி தரமான மாணவர்களை உருவாக்குகிறது என்றால், நம் தமிழ் நாட்டில் இருந்து IAS தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை ஏன் குறைந்து கொண்டே வருகிறது? அப்துல் கலாம் போல் ஏன் நல்ல விஞ்ஞானிகள் உருவாகவில்லை? புதிய தொழில் நுட்பங்களில் ஆராய்ச்சி செய்ய ஏன் யாருமேயில்லை?. காரணம் இந்த பள்ளிகள் நம் குழந்தைகளுக்கு பாட புத்தகங்களை எப்படி உருவேற்றுவது என்று மட்டும்தான் சொல்லித்தருகின்றன. பாடங்கள் பற்றிய முழுதான புரிதலை உருவாகுவதில்லை, சுய சிந்தனைகளை எப்படி வளர்த்து கொள்வது என்பது பற்றி எல்லாம் சொல்லி தருவதில்லை, நாமும் இதை எல்லாம் சிந்திக்காமல் குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

வார விடுமுறை நாட்கள், தேர்வு விடுமுறை நாட்களில் நாம் குழந்தைகளை வணிக வளாகங்களுக்கோ, திரையரங்கிற்கோ, பொழுதுபோக்கு இடங்களுக்கோ தான் அழைத்து செல்கிறோம். பாட புத்தகங்களையும், கேளிக்கைகளையும் தாண்டி வேறொரு உலகம் இருப்பதை சுட்டி காட்ட மறந்து விடுகிறோம். அப்படி ஒரு உலகத்தை காட்டுவதுதான் நூலகங்களின் வேலை, ஆனால் எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து சென்று பழக்கப் படுத்தியிருக்கிறார்கள் என்றால் பதில் மிகப்பெரிய கேள்விக்குறிதான். இதனால் பெரும்பாலான கிராமங்களில் இன்று நூலகங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.

ஒரு திரைப்படம் வெளிவரும்போது அதற்காக எழுதப்படும் கருத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் கூட ஒரு நூல் வெளியிடப்படும் போது வருவதில்லை, காரணம் வசிப்பவர்களின் வட்டம் குறுகிக்கொண்டே வருகிறது, பாட புத்தகங்களை வாசிப்பதையே ஒரு சுமையாக இன்றைய குழந்தைகள் எண்ணுகின்றன, இந்த எண்ணத்தை நூலகங்கள் மாற்றும். பொறியியலும், மருத்துவமும் தான் பட்டப்படிப்பு என ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்காமல் சற்று விசாலமாய் யோசிக்க நூலகங்கள் கற்றுத்தரும். குழந்தைகளின் வாசிப்பு குறைந்ததால் குழந்தைகளுக்கான நூல்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அம்புலிமாமா, ராணி காமிக்ஸ் போன்ற நூல்களின் நிலை என்ன ஆனதென்றே தெரியவில்லை.

அடையாறு மலர் மருத்துவமனை பின்புறம் இருக்கும் பொது நூலகத்திற்கு வாரந்தோறும் செல்கிறேன், வீட்டில் பொழுது போகாமல் நூலகத்தில் நாளிதழ்களை வாசிக்க வரும் நான்கு பெருசுகளையும் என்னையும் தவிர வேறு யாரும் இருப்பதில்லை, இந்நிலை தொடர்ந்தால் நகர்ப்புறங்களில் கூட நூலகங்களை விரைவில் மூடிவிடுவார்கள் என்ற பயம் என்னை தொற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

மது, புகை போன்று வாசிப்பதும் ஒருவித போதைதான் நம் குழந்தைகளுக்கு அந்த போதையை ஒரு முறை நாம் காட்டிவிட்டால் போதும் பின்பு ஆயிரம் ஆயிரம் அப்துல் கலாம்கள் தானாகவே உருவாகிவிடுவார்கள்.

Friday, August 1, 2014

சூழ்ச்சி பாகம் இரண்டு

30 நிமிடங்கள் முன்பாகவே அரண்மனையை அடைந்திருந்தான் பிரபு, ராணியாரை சந்திக்கும் நேரம் நெருங்க நெருங்க அவனின் இதய துடிப்பின் வேகமும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது, அப்பொழுதுதான் ஒரு விசயத்தை கவனித்தான் அவன் மட்டுமல்லாது வேறு சில முக்கிய மந்திரிகளும் ராணியை காண வந்திருந்தார்கள், அரண்மனையின் ஓய்வு அறையில் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்திருந்தாலும்  தங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தது கிட்டத்தட்ட எல்லோரும்  இவன் மனநிலையிலேயே இருந்தார்கள் என்பதை காட்டியது. சிறிது நேரத்தில் ராணியாரின் உதவியாளர் வந்து அனைவரையும் ராணியின் அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பிறகு ஒரு சிறு செருமலுடன் தன் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்தார் ராணி, "நம் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது அதற்க்கு இரண்டு முக்கிய காரணங்கள், ஒன்று உலகப்போர். நிறைய நாடுகளை நமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தாலும் போர் செலவுகள் நம் கஜானாவை காலி செய்திருக்கிறது. இரண்டு இந்திலி. இந்திலியின் செல்வங்களை நம் நாட்டிற்கு கொண்டுவரத்தான் நாம் அவர்களை நம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தோம் ஆனால் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற அந்நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே நிறைய செலவிட வேண்டியதாயிருக்கிறது. உதாரணமாக அணைகள், சாலை வசதி, ரயில்நிலையங்கள், ரயில் தடங்கள், தொலைதொடர்பு வசதிகள் என அனைத்தும் நாம் தான் செய்ய வேண்டியிருக்கிறது.

இதனால் நம்மால் இந்திலியை நிர்வகிக்க முடியவில்லை என தன்னாட்சி வழங்கினால், கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகள் நம் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஒரு நாட்டை நம்மால் நிர்வகிக்க முடியாமல் சுதந்திரம் வழங்கியதாய் ஆகிவிடும் அது நம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாய் எழுதப்பட்டுவிடும். சரி தன்னாட்சி தராமல் நம் கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருக்கலாம் என்றால் அதுவும் முடியாது, காரணம் சந்திரசேகர். நம் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திலியில் ஒரு பெரும் இராணுவத்தையே உருவாகிக் கொண்டிருக்கிறார், தற்போது இருக்கும் சூழ்நிலையில் அந்த இராணுவத்தை நம்மால் எதிர்கொள்ள இயலாது நிச்சயம் தோல்வியை தழுவுவோம், இதுவும் வரலாற்றில் நாம் துரத்தியடிக்கப்பட்டதாய் பதியும். இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் இந்திலி நம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை உருவாகிவிடும் போல் இருக்கிறது.

தற்போதிய சூழ்நிலையில் நாம் இந்திலியை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் ஆனால் நம் வரலாறும் பாதிக்ககூடாது. நாமாய் தன்னாட்சி தந்ததாய் இருக்க வேண்டும் அதே சமயம் அவர்களுக்கு பயந்தோ அல்லது நிர்வகிக்க முடியாமலோ தந்ததாய் இருக்க கூடாது. நான் அனைவரையும் அழைத்தது இதற்காகத்தான், உங்கள் அனைவருக்கும் இரண்டு நாள் அவகாசம் தருகிறேன் என்ன செய்யலாம் என சிந்தியுங்கள், நாளை மறுநாள் உங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பாக்கிறேன்." என ராணி முடித்தார்.

பிரபுவுக்கு தான் நினைத்தது போல் பெரிய பிரச்சனை ஏதும் இல்லை என்ற சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் ராணியிடம் என்ன பதிலளிப்பது என்ற கவலை ஆரம்பித்தது. மீண்டும் தன் தூக்கம் தொலைந்ததை எண்ணி நொந்துகொண்டான். என்ன செய்வது என எண்ணிக்கொண்டே ராணியாரின் பேச்சை திரும்பவும் மனதுக்குள் அசைபோட ஆரம்பித்தான், நாம்தான் இந்திலியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்தோம் என்றால் தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு இந்திலி எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் மேலோங்கவே, அதை தெரிந்து கொள்வதற்காக தன் தாத்தாவின் கையேடுகளை தேட ஆரம்பித்தான்.

நீண்ட தேடலுக்கு பிறகு தன் தாத்தா இந்திலியை பற்றி எழுதியிருந்த கையேடு கிடைத்தது, ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தான், படிக்க படிக்க அவன் முகம் மலர்ச்சி அடைய ஆரம்பித்தது.

(தொடரும்...)







Tuesday, July 22, 2014

சூழ்ச்சி...

நள்ளிரவு இரண்டு மணி, கப்பல் ஹைரா கண்டத்தின் ஆங்க்லாந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது கப்பலின் மேல் தளத்திலிருந்த சொகுசு அறையில் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தான் பிரபு. அவன் இந்திலியின் தலைமை நிர்வாக பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டது, இடைப்பட்ட காலங்களில் எவ்வளவு முக்கியமான காரியமாக இருந்தாலும் ராணியார் தபால் மூலமாகவோ அல்லது வேறு யாரிடமோ சொல்லி அனுப்பிவிடுவார் நேரில் வருமாறு அழைத்ததேயில்லை, ஆனால் இம்முறை நேரில் வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார், இந்திலியில் இருந்து கிளம்பியது முதல் இந்த நிமிடம் வரை என்ன காரணமாயிருக்கும் என குழம்பிக்கொண்டிருந்தான். பயணக்களைப்பு மனக்குழப்பத்தையும் மீறி அவனை தூக்கத்தில் தள்ளியது. அவன் விழிக்கவும் கப்பல் ஆங்க்லாந்தை அடைவதும் சரியாக இருந்தது.

இந்திலி. அமாசியா கண்டத்தின் வால் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நாடு, இயற்க்கை வளங்கள் கொட்டிகிடக்கும் இந்த நாட்டை மற்ற நாடுகள் பூமியின் சொர்க்கம் என்று வர்ணிப்பார்கள். ஆங்க்லாந்து மட்டுமல்லாது மற்ற நாட்டு மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்திலி சென்று வரவேண்டும் என்று நினைப்பார்கள். கலாச்சாரம், கலை, வீரம், செல்வ செழிப்பு என அனைத்திலும் இந்திலி நாட்டு மக்கள் மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு தன்னிகரற்று சிறந்து விளங்கினார்கள் ஆனால் இயற்க்கை சார்ந்த வாழ்க்கை முறை கொண்டிருந்த இந்திலி மக்கள் இரண்டு விசயங்களில் பலவீனமாக இருந்தார்கள். ஒன்று தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சிறு சிறு குழுக்களாக பிரிந்திருந்தனர், இரண்டு அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி ஏதும் அறியாதிருந்தார்கள்.

ஹைரா கண்டத்தில் இருக்கும் ஒரு குட்டித்தீவு தான் ஆங்க்லாந்து, இந்திலியை போல வளமான நாடு இல்லை என்றாலும், விஞ்ஞான வளர்ச்சியில் சிறந்து விளங்கினார்கள். இந்திலியுடன் வணிக உறவு எற்படுத்திக்கொள்ளத்தான் அவர்கள் முதலில் இந்திலி வந்தார்கள், ஆனால் இந்திலியின் செல்வ செழிப்பு அவர்களை திசை திருப்பியது, விளைவு சிறிது சிறிதாக இந்திலி ஆங்க்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, இந்திலி மக்களின் ஒற்றுமையின்மை இதை அவர்களுக்கு மிக எளிதாக்கியது. இன்றோடு எண்பத்தொன்பது வருடமாகிறது இந்திலி ஆங்க்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த இந்திலி மக்கள் நாளடைவில் ஆங்க்லாந்தின் அதிகார வர்க்கத்தை எதிர்க்க துவங்கினார்கள்

ஆனால் இந்த எதிர்ப்புகள் எல்லாம் துவங்கும் முன்னரே ஆங்க்லாந்து இந்திலியில் இருந்து அனைத்து செல்வங்களையும் தங்கள் நாட்டிற்கு கொண்டு சேர்த்திருந்தனர், அந்த செல்வங்களை கொண்டு உலகின் பிற நாடுகளையும் தங்கள் கட்டுப்பாடிற்குள் கொண்டு வர எண்ணினர், இதனால் நாடுகளுக்கு இடையே போர் மூண்டது ஆங்க்லாந்து இந்திலியின் இராணுவத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு போரில் பெரும் வெற்றி பெற்றது, உலகின் பெரும்பாலான நாடுகள் குட்டித்தீவு நாடான ஆங்க்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. போரின் காரணமாக ஆங்க்லாந்து பெரும் பொருளாதார சீரழிவை சந்திக்க நேர்ந்தது, இந்திலியிலும் விடுதலை கோரி போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்தன.

இந்திலியின் விடுதலை போராட்டத்தில் இரண்டு நபர்கள் அதிக பங்காற்றினார்கள், ஒருவர் மோகன் அஹிம்சா முறையில் ஆங்க்லாந்தின் அதிகாரத்தை எதிர்த்து போராடி வந்தார், மற்றொருவர் சந்திரசேகர் ஆங்க்லாந்துக்கு எதிராக போராடுவதற்காக இந்திலியில் ஒரு மிகபெரிய இராணுவத்தையே உருவாக்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான்ஆங்க்லாந்தின் ராணி இந்திலியின் தலைமை நிர்வாகி பிரபுவை நேரில் வருமாறு அழைத்திருந்தார்.

பல வருடங்களுக்கு பிறகு தன்  தாய் நாடான ஆங்கால்ந்து வந்திருந்தான் பிரபு, இந்திலியின் தலைமை பொறுப்பேற்ற பிறகு வேலை பளு காரணமாக அவனால் ஆங்க்லாந்து வர இயலவில்லை, துறைமுகத்தில் இருந்து வீடு வரும்வரை வீதிகளை பார்வையிட்டுக்கொண்டே வந்தான் இந்த ஆறு வருடங்களில் ஆங்க்லாந்து நிறையவே மாறியிருந்தது இந்திலியில் இருந்த சொர்க்கத்தை ஆங்க்லாந்துக்கு மாற்ற முயற்ச்சித்திருப்பது கண்கூடாக தெரிந்தது, ஆனால் அந்த முயற்சியில் ஆங்க்லாந்து தோற்றுப்போய்  இருப்பதை பிரபுவால் உணரமுடிந்தது. மனதில் இருந்த குழப்பத்தின் காரணமாக அவனால் எதையும் ரசிக்க முடியாமலே வீடு வந்து சேர்ந்தான், பெற்றோரின் விசாரிப்புகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்து விட்டு, அரண்மனைக்கு செல்வதற்காக தயாரானான்.

(தொடரும்...) 



Tuesday, July 8, 2014

எது தடுக்கிறது?

 சென்ற வாரம் ஒரு வேலையாக சொந்த ஊருக்கு செல்லவேண்டியிருந்தது, எப்பொழுதும் ஊருக்கு செல்வதானால் காரில் தான் செல்வேன் ரயிலில் அல்லது பஸ்சில் செல்வது என்பது எனக்கு சலிப்பான விசயம், ஆனால் இம்முறை ஒரு மாறுதலுக்காக பஸ்சில் செல்வதென முடிவெடுத்தேன், பல வருடங்களுக்கு பிறகு பஸ்சில் செல்வதால் அது ஒரு புதுவித அனுபவமாகவே எனக்கு பட்டது.

பஸ்சில் ஜன்னல் ஒர இருக்கையில் அமர்ந்திருந்தேன் எனக்கு அருகில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான் எங்கள் இருக்கைக்கு பக்கவாட்டு இருக்கையில் ஒரு இளம் தம்பதியினர் அமர்ந்திருந்தனர் அதற்க்கு முன் இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் ஒரு இளம் பெண்ணும் அமர்ந்திருந்தனர்

முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி தனது இருக்கையை பின்னோக்கி தள்ள முயற்சித்துக்கொண்டிருந்தார் எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட தெரியவில்லை என்பதே சரி, ஏனெனில் அவருக்கு எந்த buttonஐ press செய்வதென தெரியவில்லை, தடுமாறிக்கொண்டிருந்தார். பக்கத்துக்கு இருக்கைகளில் அமர்ந்திருந்த அனைவரும் நான் உட்பட எவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை (நடத்துனர் உதவியுடன் அந்த பெண்மணி தனது இருக்கையை சரி செய்து கொண்டார் என்பது வேறு விசயம்)

என் உள்ளுணர்வு உதவி செய்ய தூண்டினாலும் ஏதோ ஒன்று என்னை தடுத்துக்கொண்டெயிருந்தது, என் மனநிலையில் தான் மற்றவர்களும் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.யோசித்து பார்க்கையில் ஒரு விசயம் புலப்பட்டது நாம் எல்லோருமே கடிவாளம் கட்டிய குதிரையை போல் தலையை குனிந்தபடி ஒரு நேர்கோட்டு பாதையில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் வழியின் இருபுறங்களிலும் நடப்பதை அறியாமலே. என்றாவது ஒரு நாள் நம் பாதையில் ஒரு இடையுறு வரும்போதுதான் நாம் நிமிர்ந்தே பார்க்கிறோம்.

நாம் தினமும் செல்லும் பாதையில் என்றாவது ஒரு விபத்து ஏற்பட்டால் நம்மில் பெரும்பாலோனோர் உதவி செய்வதற்காய் இறங்கியதேயில்லை, ஒரு "உச்" கொட்டிவிட்டு சென்றுகொண்டேயிருப்போம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு அந்த விபத்து நேரும்வரை இந்த  "உச்' மட்டும்தான் நம் reaction. ஆனால் கூர்ந்து கவனித்து பாருங்கள் கண்டிப்பாக அந்த இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ தன் உதவிக்கரத்தை நீட்டியிருப்பான். ஒரு குப்பனுக்கும், சுப்பனுக்கும் இருக்கும் அந்த தைரியம் professional என்று சொல்லிக்கொள்ளும் நம்மில் பலருக்கு ஏன் இல்லை?

ஆரம்ப கால கைப்பேசிகளில் password lock செய்யும் வசதிகள் எல்லாம் கிடையாது எவரும் இன்னொருவர் கைப்பேசியை அவரின் அனுமதியின்றி பயன்படுத்த முடியும் ஆனால் இன்று வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களும் password lock உடன்தான் வருகின்றன, கைபேசிகளை போலவே நாமும் நம் வாழ்க்கைத்தரம் உயர உயர நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்கிறோம் அடுத்தவர்களுக்கு உதவும்முன் நாம் அதன் பின்விளைவுகள் நம் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டிருக்கிறதா என ஒருமுறை அறிந்து கொண்டே செயலில் இறங்குகிறோம்.

அலுவலக நண்பர் ஒருவரின் ஸ்மார்ட் போன் password lock இல்லாமல் இருந்தது, காரணம் விசாரித்தேன், அவர் தந்தை ஒரு சாலை விபத்தில்தான் இறந்திருக்கிறார் அருகில் இருந்தவர்கள் அவர் தந்தையின் கைபேசி மூலம்தான் நண்பருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள், அந்த கைபேசியில் password lock இருந்திருந்தால் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான், தந்தையின் இறப்பு இதை அவருக்கு புரியவைத்திருக்கிறது தன் கைப்பேசியின் password ஐ நீக்கிவிட்டார்.

நானும் என் பாதுகாப்பு வளையத்தை நீக்கிவிட்டேன் கைபேசியில் மட்டுமல்ல மனதில் இருந்தும்தான்... அடுத்த முறை ஏதேனும் சாலை விபத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் இறங்குவேன்.

Friday, June 20, 2014

ஒரு விளம்பரம்...

 எங்கள் விவசாயம் மழை சார்ந்தே இருந்ததால், கோடை காலங்களில் கால்நடைகளுக்கான தீவன பயிர் வகைகள் பயிரிட்டது போக எஞ்சிய நிலங்கள் தரிசாகதான் இருக்கும், அந்த தரிசு நிலங்கள் தான் கோடை கால பள்ளி விடுமுறையின் போது எங்களின் விளையாட்டு மைதானம். மணிரத்தனத்தின் அக்னி நட்சத்திரத்தை தவிர வேறு எந்த அக்னி நட்சத்திரத்தையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. காலை சிற்றுண்டிக்கு பிறகு தொடங்கும் எங்கள் விளையாட்டு உச்சி வேலையையும் தாண்டி நீளும். கில்லி தாண்டு, உயிர் கொடுத்தல், கண்ணாமூச்சி, கபடி, மட்டை பந்து என தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே நாமெல்லாம் ரொம்பவே சிகப்பு இதில் அக்னி நட்சத்திர வெய்யலில் விளையாட்டு வேறு, அதனால் ஒவ்வொரு விடுமுறையிலும் நாம் இன்னும் அதிகமாய் மெருகேரியிருப்போம்.

ஆனால் இப்படி விளையாடுவதில் பல நன்மைகள் இருந்தன, முக்கியமாக விட்டுக்கொடுக்க பழகியிருந்தோம், சூரிய ஒளிக்கற்றையிலிருந்து கிடைக்கும் விட்டமின்களால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருந்தது. வெயிலோ, மழையோ காய்ச்சல், சளி என எந்த வியாதியும் எங்களை அவ்வளவாய்  பாதித்ததில்லை. போலியோ, அம்மை தவிர வேறு எந்த நோய்க்கும் தடுப்பூசி போட்டதாய் ஞாபகம் இல்லை.

இன்று அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக குழந்தைகளின் பொழுதுபோக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டிக்குள் அடங்கிவிட்டது, அவர்களின் பொழுதுபோக்கே வீடியோ கேம்ஸ்-ம், கார்ட்டூன் சேனல்களும் தான், விளைவு பருவநிலை மாற்றங்களை சந்திக்கின்ற சக்தி அவர்களின் உடல்நிலையில் இல்லை மேலும் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு இணயாக அவர்களின் உடல் வளர்ச்சி அமைவதில்லை நியுட்டனின் மூன்றாவது விதிப்படி அறிவியலின் வளர்ச்சிக்கு இணையாக அதனால் நாம் சந்திக்கும் அபத்தம் இது.

இதைத்தான் இன்றைய நுகர்பொருள் வணிக நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன, கலாச்சார மாற்றத்தினால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்ப்பட்ட குறைபாடுகள் அவர்களின் விளம்பர ஆயுதமாகிவிட்டது. உப்பு இருக்கா, கால்சியம் இருக்கா, அயோடின் இருக்கா என வேதியியலில் உள்ள அனைத்து பெயர்களையும் தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தியிருப்பார்கள். சோப்பு, பற்பசை விளம்பரங்கள் எவ்வளவோ பரவாயில்லை, கிருமி, சரும கோளாறு என்ற அளவில்தான் நம்மை பயமுறுத்திகொண்டிருப்பார்கள், ஆனால் இந்த சமையல் எண்ணெய் நிறுவனங்கள்தான்  நம்முள் ஒரு உயிர் பயத்தையே உருவாக்குவார்கள். இவர்களின் பொருட்களை பயன்படுத்தாவிட்டால் அடுத்த நாள் நாம் அவசர சிகிச்சை பிரிவில்தான் இருப்போமோ என்ற பயத்தை நம்முள் உருவாக்கி விடுவார்கள்.

என் தாத்தா இறக்கும் போது அவருக்கு தொண்ணூறு வயதிருக்கும், அவர் இறக்கும் முதல் நாள் வரை தனக்கான வேலைகளை தானே தான் செய்துகொண்டார், பிறரின் உதவியைய் அவர் எதிர்பார்த்ததேயில்லை. வேப்பங்குச்சியில் தான் பல் விலக்குவார், கை குத்தல் அரிசி, இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட காய்கறிகள் என அவரின் வாழ்க்கை முறை இயற்கையை சார்ந்தே அமைந்து இருந்தது, இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இயற்கை முறைகளை புறக்கணிப்பதால் நிகழும் எதிர்மறை நிகழ்வுகள்தான் நம் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கிய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது...




  

Saturday, June 7, 2014

சம்பளம் போட்டாச்சா

என் அப்பா ஒரு ஆசிரியர், அவரின் ஓய்வு நேரத்தில் எங்கள் தோட்டத்தில் விவசாயத்தையும் கவனித்து வந்தார், தோட்டத்தின் நடுவில் எங்கள் வீடு. ஓட்டு வீடுதான். எங்கள் குடும்பம், என் சித்தப்பா குடும்பம் மற்றும் தாத்தா, பாட்டி என ஒரு கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம், தாத்தா தன் சொத்துக்களை இரு மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்த பிறகும் அனைவரும் ஒன்றாக அதே வீட்டில் தான் வசித்து வந்தோம்.

கலாச்சார மாற்றத்தினால் இப்பொழுது கூட்டு குடும்பங்களை காண்பது அரிதாகிவிட்டது, நமக்கான தனித்துவமாய் விளங்கிய எத்தனையோ அடையாளங்களை இந்த கலாச்சார மாற்றத்தினால் நாம் இழந்து விட்டோம் அதில் ஓன்று "சேமிப்பு".

என் அப்பாவின் ஆரம்ப காலம் சம்பளம் வெறும் மூன்று இலக்கம், பின்பு நாளடைவில் நான்கு இலக்கமாகி ஓய்வுக்காலம் நெருங்கும்போது ஐந்து இலக்கத்தை எட்டி இருந்தார். அவரின் சம்பளம் மற்றும் விவசாயத்தில் வரும் சொற்ப வருமானத்தையும் கொண்டுதான் என்னையும் என் அண்ணனையும் படிக்கவைத்தார். யாரிடமும் எதற்க்காகவும் கடன் வாங்கியது கிடையாது, என் அப்பா மட்டுமல்ல அந்த தலைமுறையை சேர்ந்த பெரும்பாலோனோர் கடன் வாங்குவதை ஒரு கவுரவ குறைவாகவே எண்ணினர்.

இப்பொழுது தோட்டத்தில் ஓட்டு வீடு மெத்தை வீடாகிவிட்டது, ஏழு இலக்கக்கங்கள் செலவு செய்து கட்டப்பட்ட வீடு அது, அதற்காக அப்பா எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை அவரின் சம்பளத்தில் மாதாமாதம் ஒரு சிறு தொகையை சேமித்ததின் பலனாகத்தான் அது சாத்தியமானது. அந்த தலைமுறையை சார்ந்தவர்கள் எல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள், ஒரு பொருளை வாங்குவதற்க்கு முன்பே அதற்கான தொகையை சேமித்திருந்தார்கள், நம்மைப்போல் வங்கி கடன்களை நம்பி அவர்கள் வாழ்க்கை நடத்தவில்லை. அவர்களின் அதிகபட்ச வங்கிகடன் விவசாய கடனாகவோ அல்லது தொழில் துவங்க வாங்கப்பட்ட கடனாகவோதான் இருந்தது.

இன்று நிலைமை தலைகீழ், "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" - இந்த வார்த்தையை நாம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். நண்பர் ஒருவர் ஆறு இலக்கங்களில் மாத சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார் ஆனால் வீட்டு கடன், வாகன கடன், கடன் அட்டை மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவு என ஐந்தாம் தேதியே அவரின் வங்கி கணக்கில்  தொகை நான்கு இலக்கத்திற்கு வந்துவிடும் அதுவும் இருபதாம் தேதி வரைதான், அதன் பிறகு இரண்டு இலக்கத்தை எட்டிவிடும், மூன்று இலக்கத்திற்கு கீழ் வங்கி கணக்கில் இருந்து தொகை எடுக்க முடுயாது என்பதால் அந்த இரண்டு இலக்க தொகை அப்படியே தங்கிவிடும் அதுதான் அவரின் மாத சேமிப்பு :)

என் நண்பரை குறை சொல்ல முடியாது ஏனெனில் ஒவ்வொரு corporate கம்பெனியின் வாயிலிலும் ஏதாவது ஒரு வங்கியின் எமகாதகர்கள் வீட்டு கடன், வாகன கடன் அல்லது கடன் அட்டை என்று ஏதாவது ஒரு பாசக்கயிற்றுடன் நின்று கொண்டிருக்கிறார்கள் அதில் தப்பி பிழைப்பவர்கள் ஒரு சதவீதம் பேர்தான். அதுமட்டுமல்லாது இந்த கலாச்சார மாற்றத்தில் சகமனிதனை நாம் பார்க்கும் விதம்கூட மாறித்தான்  போயிருக்கிறது, உதாரணமாக சென்ற தலைமுறை மக்கள் எவரேனையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களின் விசாரிப்புகள் பெரும்பாலும் நம் நலனை பற்றியதாகத்தான் இருக்கும் (குழந்தையின் படிப்பு, வேலை பளு போன்றவை).

ஆனால் நம் பள்ளி அல்லது கல்லூரி நண்பர் ஒருவரை சில காலங்கள் கழித்து சந்தித்தால் அவர்களின் விசாரிப்புகள் வேறு மாதிரியாகத்தான் இருக்கும்(எங்கு வேலை, என்ன சம்பளம், வீடு வாங்கியாச்சா, என்ன கார் போன்றவை) இந்த அந்தஸ்த்து பிரச்சனைதான் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துவிடுகிறது. புரிந்து கொண்டவர்கள் விலகி நிற்க்கத்தான் பார்க்கிறார்கள் ஆனால் இந்த பாழாய் போன அந்தஸ்த்து மட்டும் விக்கிரமாதித்தன் முதுகில் இருக்கும் வேதாளம் போல் நம்மை விட்டு போகமாட்டேன் என அடம்பிடிக்கிறது.

அந்த வேதாளம் தான் நம்மை வீடு முதல் காடு வரை அனைத்தையும் மாத தவணையில் வாங்க வைக்கிறது, வாங்கும் பொருள் அனைத்திற்க்கும் உரிய விலையை விட அதிக விலையை வட்டி எனும் பெயரில் தந்து கொண்டிருக்கிறோம் என தெரியாமலே.  வங்கிகளின் வாராக்கடன் மட்டும் பல நூறாயிரம் கோடிகள், ஆனாலும் வங்கிகள் கடன் தந்துகொண்டுதான் இருக்கின்றன காரணம் வங்கிகள் கடன் தருவதை நிறுத்திவிட்டால் மாத தவணைகளில் பொருள் விற்க்கும் அனைத்து தொழில்களும் நலிந்துவிடும். மாதம் பல நூறாயிரம் விற்றுகொண்டிருக்கும் வீடுகளும், கார்களும் ஒரு ஆயிரம் தாண்டுவதே கடினம்.

சுழற்ச்சி முறையில் வங்கிகளும் வியாபாரிகளும் நம்மிடம் இருந்து நம் வருமானத்தை உறிஞ்சி கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் கட்டும் வருமான வரியில் வரி மட்டும்தான் நமது, வருமானம் ஏதோ ஒரு வியாபாரியின் கல்லாபெட்டியைதான் நிரப்பிக்கொண்டிருக்கிறது. அவர்களின் வருங்கால சந்ததிகளுக்காக நாம் அயராது உழைத்துகொண்டிருக்கிறோம். நான் சொல்வதெல்லாம் வாதத்திற்க்கு வேண்டுமானால் நன்றாக இறக்கும் என நினைக்கலாம், ஆனால் ஐந்து இலக்கம் மாத சம்பளம் வாங்கிய ஒருவரால் ஏழு இலக்கம் மதிப்புள்ள ஒரு வீட்டை கடன் இல்லாமல் கட்டும் பொழுது, ஆறு இலக்கம் மாத சம்பளம் வாங்கும் ஒருவரால் முடியாதா என்ன?

இந்நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையில் "சேமிப்பு" என்று google-ல் தேடினால் "மாத தவணை" என்றுதான் வரும்போல...