Monday, May 26, 2014

எழுத தொடங்கியாச்சு...

எழுத ஆரம்பித்தாகிவிட்டது.., சில காலங்களுக்கு முன்பு வரை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான விடயம் இல்லை. பக்கம் பக்கமாக எழுதி ஏதேனும் ஒரு வார இதழ் அல்லது மாத இதழுக்கு தபால் மூலம் அனுப்பிவிட்டு தினமும் தபால் அலுவலரை எதிர் நோக்கி காத்திருப்போம், அவர் நம்மை கடக்கும் போதெல்லாம் நம் இதய துடிப்பு ஒருமுறை இமயமலையின் உச்சியை தொட்டுவிட்டு வரும் ஆனால் அவரோ இன்னுமாடா இந்த உலகம் உன்ன நம்பிகிட்டு இருக்கு என்பது போல பார்த்துவிட்டு செல்வார்.

 பத்திரிக்கை அலுவலகத்தில் நிலைமை இதைவிட மோசம், நம்மை போல் இன்னும் ஓராயிரம்பேர் தங்கள் கதைகளை அனுப்பி இருப்பார்கள், அதில் நமது கதை அந்த இதழின் ஆசிரியர் கண்ணில் படுவதே பெரியவிசயம் அப்படியே பொறுப்பாசிரியர் நமது கதையை படித்தாலும் அவர் தன் பொறுப்பை காட்டுகிறேன் என்று நமது கதைகளில் இருக்கும் இலக்கணப்பிழை, சந்திப்பிழைகளை அடிக்கோடிட்டு குப்பையில் எறிந்துவிடுவார்.

சில பத்திரிக்கைகள் இன்னும் மோசம் தங்களை தமிழின காவலர் என எண்ணிக்கொண்டு, நீயெலாம் எழுதளின்னு எவண்டா அழுதான் என்று ஆரம்பித்து மூன்று தலைமுறை முன்னோர்கலையெல்லம் தோண்டியெடுத்து திட்டி பதில் கடிதம் அனுப்பி இருப்பார்கள்.

இவ்வளவு தடைகளையும் தாண்டி நம் எழுத்து ஒரு பத்திரிக்கையில் பிரசுரம் ஆகிவிட்டால் போதும் நாம் ஒரே நாளில் உள்ளூர் பிரபலம் ஆகிவிடுவோம் (உலக பிரபலம் எல்லாம் கமலஹாசன் போன்றோரால்தான் ஆகமுடியும்). பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து 50 ரூபாயை தபாலில் அனுப்பி இருப்பார்கள் ஆனால் நண்பர்களுக்கு 500 ரூபாயிக்கு விருந்து வைப்போம்.

இன்று நிலைமை தலைகீழ் ஒரு வலைப்பதிவை துவங்கி எவரும் எழுதலாம் யாரிடமும் அனுமதி தேவையில்லை, நாம் எழுதும் கதைகளுக்கு நாம்தான் பொறுப்பாசிரியர், பதிப்பகர் எல்லாம்(சில சமயங்களில் வாசகரும் நாம் மட்டும்தான் இருப்போம் என்பது வேறுவிசயம்). ஆனாலும் நம் எழுத்துக்கள் காகிதத்தில் அச்சாகும் போது ஏற்படும் மனதிருப்தி வலைபதிவுகளில் எழுதும்போது கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இருப்பினும் நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன், வாரம் ஒரு வலைபதிவு எழுதலாம் என்று இருக்கிறேன் பார்ப்போம்...

No comments:

Post a Comment